கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம்: காயத்ரி ரகுராம் ஆதரவு

By காமதேனு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக் கடலில் பேனா சிலை அமைப்பதற்கு ஆதரவாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜன.31-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு தரப்பினர் ஆதரவும், சீமான் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இவ்வாறு இரண்டு பிரிவாக பிரிந்து ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், வங்கக் கடலில் பேனா சிலை எழுப்புவது தொடர்பாக தனது ஆதரவு நிலைப்பாட்டை ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், " மக்களின் பல லட்சம் வரிப் பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE