புதுக்கோட்டையில் 7-வது புத்தகத் திருவிழா கோலாகலம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 7-வது புத்தகத் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 7-வது புத்தகத் திருவிழா, மன்னர் அரசு கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் எம்.அருணா தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புத்தகக் காட்சியை திறந்து வைத்தனர்.

விழாவில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, நகராட்சித் தலைவர் திலகவதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

புத்தக் திருவிழா தொடங்கிய காலை வேளையிலேயே 100 அரங்குகளும் வாசகர்களால் நிறைந்து காணப்பட்டன. கல்லூரி மாணவ - மாணவியரின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அனைத்துப் பதிப்பகத்தாரும் புத்தகங்கள் விலையில் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE