குப்பைக்குப் போகும் ஓபிஎஸ் - இபிஎஸ் படங்கள் இணைந்து அச்சடிக்கப்பட்ட அதிமுக கொடிகள்: மன்னார்குடியில் பரபரப்பு

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: மன்னார்குடியில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரின் படங்களுடன் இணைந்து அச்சடிக்கப்பட்ட கட்சி கொடி பண்டல்களை, குப்பையில் வீசுவதற்காக சாலையோரம் போடப்பட்டுள்ளது. ஆனால், அவை கடந்த ஒருவாரமாக யாரும் சீண்டுவாரின்றி கிடக்கின்றன.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பந்தலடி பகுதியில் உள்ள பிரபலமான புத்தகக் கடை வாசலில், குப்பையில் வீசுவதற்காக எடுத்து வைக்கப்பட்ட அதிமுக கொடிகளை கடந்த ஒரு வார காலமாக யாரும் எடுத்துச்செல்ல கூட முன்வரவில்லை. அதற்குக் காரணம், அந்த கொடியில் ஓபிஎஸ் - இபிஎஸ் படங்கள் ஒன்றாக அச்சிடப்பட்டிருப்பது தான். அதிமுகவில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தபோது இரட்டை இலை மற்றும் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரது படங்களுடன் அச்சடிக்கப்பட்ட காகிதக் கொடிகள் இவை.

தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தனித் தனியாகப் பிரிந்து சென்று தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இருவரது தலைகளையும் ஒன்றாகப் போட்டு அச்சிடப்பட்ட அதிமுக கொடிகள் காலாவதியாகி விட்டன. இனி இந்தக் கொடிகள் எக்காலத்திலும் தேவைப்படாது என முடிவுக்கு வந்துவிட்ட கொடி விற்பனையாளர்கள், அவற்றை குப்பையில் வீச தயாராகிவிட்டனர்.

மன்னார்குடியில் அப்படி குப்பையில் போட எடுத்துவைக்கப்பட்ட இந்தக் கொடிகளை விளையாட்டுப் பிள்ளைகள் கூட திரும்பிப் பார்க்கவில்லை. இதனால், ஒரு வார காலத்துக்கும் மேலாக கடை வாசலிலேயே கிடக்கின்றன அந்தக் கொடி பண்டல்கள். நகராட்சி ஊழியர்களும் இந்தக் கொடிகள் பண்டல்களாக கட்டப்பட்டிருப்பதால் இது அந்தக் கடைக்கு வந்த பார்சலாக இருக்கலாம் என, பார்த்தும் பார்க்காமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக கொடிகளை குப்பையோடு அள்ளிக்கொண்டு போனால் அதையும் யாராவது கேள்வி கேட்பார்களோ என்ற பயமும் அவர்களுக்கு உள்ளுக்குள் இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி என மூன்று அணிகளாக சிதறிக் கிடக்கிறது. இதில் ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் கட்சியை மீண்டும் ஒன்றிணைக்கும் மூடில் இருக்கிறார்கள்.

இபிஎஸ்ஸோ, அவர்கள் இருவரையும் சசிகலாவையும் மீண்டும் கட்சிக்குள் இணைக்க வாய்ப்பே இல்லை என சங்கநாதம் எழுப்பி வருகிறார். மன்னார்குடி கடை வாசலில் குப்பைக்குப் போக காத்திருக்கும் அதிமுக கொடி பண்டல்களை பார்த்தால், அதிமுக இனி ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என பொதுமக்களும் தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE