இளையான்குடி கண்மாயில் மர்ம நபர்கள் தீ வைப்பு: 6 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்

By இ.ஜெகநாதன்

இளையான்குடி: இளையான்குடி கண்மாயில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் சீமைக்கருவேல மரங்கள் பற்றி எரிந்தன. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் பெரிய கண்மாய் உள்ளது. விவசாயப் பணிகள் முடிந்த நிலையில் இந்தக் கண்மாயில் தண்ணீர் வற்றி நாணல் புற்கள், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டன. இந்த நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் கண்மாய்க்கு தீ வைத்தனர். காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனால் இளையான்குடி நகர் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.

தகவல் அறிந்து அங்கு சென்ற இளையான்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தென்னை மட்டை, இலை தலைகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

ஆனால், காற்றின் வேகத்தால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான சீமைக்கருவேல மரங்கள் எரிந்து சேதமாகின. நகரை புகை சூழ்ந்ததால் பொதுமக்களும் அவதி அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE