தென்காசி: வடகரை, சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். வடகரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காட்டு யானைகளால் சேதமடைந்த பயிர்கள், தண்ணீர் குழாய்களை ஆட்சியரிடம் காண்பித்து முறையிட்டனர்.
அவர்கள் கூறும்போது, “வடகரை, அச்சன்புதூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வடகரையில் யானையை விரட்ட முயன்ற தோட்டத்து காவலாளி நூலிழையில் உயிர் தப்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொக்கம்பட்டி அருகே காட்டு யானை தாக்கி ஒரு காவலாளி உயிரிழந்தார்.
காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், விவசாய நிலங்களில் புகாமல் தடுக்கவும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டு யானைகளால் பயிர்களுக்கு மட்டுமின்றி மனித உயிர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வனவிலங்குகள் தான் முக்கியம் என்றால் நாங்கள் அகதிகளாகி விடுவோம். யானைகளை காட்டுக்குள் விரட்டி, அவை மீண்டும் விவசாய நிலங்களில் புகாதவாறு வேலி, அகழி அமைக்க வேண்டும்.
» சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்: கோவை நீதிமன்றம் உத்தரவு
» பிஹார், ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!
யானைகளுக்கான வசதிகளை வனப்பகுதியிலேயே ஏற்படுத்த வேண்டும். யானைகளை காட்டுக்குள் விரட்ட முடியாவிட்டால் விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். காட்டு யானை, காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு குறைவாகவே நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும்” என்றனர்.
மேலும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், “நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். குளங்களில் விவசாய பயன்பாட்டுக்கு தவிர வர்த்தக நோக்கத்தில் மண்ணை எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீரமைத்து, விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.