60 ரகங்கள், 5 லட்சம் மலர் நாற்றுகள்: இரண்டாம் சீசனுக்கு ஆயத்தமாகும் உதகை தாவரவியல் பூங்கா!

By ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: நடப்பு ஆண்டு இரண்டாம் சீசனுக்காக 60 ரகங்களில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

மலைகளின் அரசியான உதகைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்படுகிறது.‌ நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் சீசனுக்கு 60 ரகங்களில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மலர் நாற்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தனர்.

இரண்டாம் சீசன் முன்னேற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி நம்மிடம் பேசுகையில், “1848-ம்‌ ஆண்டு மெக்‌ ஐவர்‌ என்பவரால்‌ இந்த (உதகை அரசு தாவரவியல் பூங்கா) பூங்கா‌ வடிவமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவுக்கு இது 176-வது ஆண்டு. இந்த ஆண்டின்‌ இரண்டாம்‌ பருவமானது செப்டம்பர்‌ மாதத்தில்‌ தொடங்குவதை முன்னிட்டு, இரண்டாம்‌ பருவ மலர் கண்காட்சிக்காக செடிகள்‌ நடும் பணிகள்‌ நீலகிரி மாவட்ட ஆட்சியர்‌ லட்சுமி பவ்யா முன்னிலையில்‌ இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது.

மலர் காட்சிக்காக கொல்கத்தா, காஷ்மீர்‌, பஞ்சாப்‌, புனே போன்ற இடங்களிலிருந்து இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச்‌ மேரிகோல்டு, ஆஸ்டர்‌, வெர்பினா, ஜாபின்‌, கேன்டிடப்ட்‌, காஸ்மஸ்‌, ஃபேன்சி, பெட்டூனியா, ஜினியா, ஸ்விட்வில்லியம்‌, அஜிரேட்டம்‌, கேலண்டுலா, ஹெலிக்ரைசம்‌, சப்னேரியா போன்ற 60 வகையான மலர்‌ விதைகள்‌ பெறப்பட்டு, சுமார்‌ 5 லட்சம்‌ வண்ண மலர்ச் செடிகள்‌ மலர்ப் பாத்திகளில்‌ நடப்படுகின்றன.‌

அத்துடன் 15,000 மலர்த் தொட்டிகளில்‌ சால்வியா, டெய்சி, டெல்பினியம்‌, டேலியா போன்ற 30 வகையான மலர்ச் செடிகள்‌ நடும் பணியும் இன்று‌ தொடக்கி வைக்கப்பட்டது. இவ்வாண்டு இரண்டாம்‌ பருவ மலர்க்காட்சி செப்டம்பர்‌ மாதம்‌ இரண்டாம்‌ வாரத்தில்‌ தொடங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு‌ சுமார்‌ 3 லட்சம்‌ சுற்றுலாப் பயணிகள்‌, பொதுமக்கள்‌ செப்டம்பர்‌ மற்றும்‌ அக்டோபர்‌ மாதங்களில்‌ உதகைக்கு வருகைபுரிவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE