சட்டம், ஒழுங்கை பாதுகாக்க பிரேமலதா வலியுறுத்தல்

By KU BUREAU

திருவள்ளூர்: மின் கட்டண உயர்வு, நியாய விலை கடைகளில்பருப்பு, பாமாயில் கிடைக்காததை கண்டித்தும், தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைகண்டித்தும் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆவடி மாநகர் மாவட்ட செயலாளர் நா.மு.சங்கர், திருவள்ளூர் மேற்குமற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் டி.கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.டில்லி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழக, கர்நாடக அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விகுறியாக உள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. தமிழக மக்களும், தமிழ் நாடும் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக திமுக ஆட்சி நடத்தி வருகிறது.

ஆனால் இங்கு எதுவும் நடக்காதவாறு நல்லாட்சி செய்வது போல், ஒரு பிம்பத்தை முதல்வர் உருவாக்கி வருகிறார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE