‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சி மையங்களால் நாமக்கல்லின் ‘நீட்’ ஆதிக்கம்: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் சிகார், நாமக்கல், கோட்டா நகரங்களில் செயல்படும் ‘பயிற்சி மையங்களில்’ படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.
இளநிலை நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720. இதில் 650-க்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். அந்த வகையில் 650-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களாக ராஜஸ்தானின் சிகார், தமிழகத்தின் நாமக்கல், கேரளாவின் கோட்டையம், ஆந்திராவின் தனுக்கு, ராஜஸ்தானின் ஜுன்ஜுனு, ஹரியாணாவின் குருஷேத்ரா நகரங்களில் செயல்படும் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் உள்ளனர்.
நாமக்கல்லைச் சேர்ந்த 313 மாணவர்கள் 650-க்கும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்களில் நாமக்கல்தான் அதிக பங்கினைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் நீட் தேர்வுக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க எதிர்ப்பை இது வெளிப்படுத்துகிறது. நீட் நடைமுறைக்கு முன், நாமக்கல் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் "டாப்பர்களை" உருவாக்கிய "சூப்பர்" நகராக இருந்தது. இப்போது, இந்த நகரம் நீட்/ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிறுவனங்களின் மையமாக உள்ளது என்ற விமர்சனமும் கவனிக்கத்தக்கது.
» சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - சென்னையில் பரபரப்பு
» தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் தேவாலய திருவிழா தேர்பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
‘நிர்வாக சீர்கேடுகளே மின் கட்டண உயர்வுக்கு காரணம்’ -தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் மின் கட்டணத்தை உயர்த்தி மின் நுகர்வோர் மீது சுமையை ஏற்றுவதை தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கண்டித்துள்ளன. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட விதிமீறல்கள் குறித்து தமிழக அரசும் நீதிமன்றமும் தாமாக முன்வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
‘கனிம வளங்களுக்கு மாநில அரசுகளே வரி விதிக்க முடியும்’ - கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினார்கள். அதன்படி,
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
“பட்டியலின, பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு” -“நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. மோடி அரசின் ‘தலித் விரோத’ மனநிலைக்கு இந்த புள்ளிவிவரங்கள் சான்று. மோடி அரசாங்கத்தின் கீழ், பட்டியலின மற்றும் பழங்குடி சமூகம் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மரியாதைக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது” என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஜூலை 30-ல் ‘பந்த்’ - பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி வரும் 30-ம் தேதி திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ‘பந்த்’ போராட்டம் நடத்தப்போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
ரூ.6,000-ல் எப்படி குடும்பம் நடத்த முடியும்? - தமிழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ரூ.6 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன? இதுபோன்ற விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். இது தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, இது தொடர்பான வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மத்திய அரசுக்கு எதிராக ஜூலை 27-ல் திமுக ஆர்ப்பாட்டம்: பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 27-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் காலிறுதியில் இந்திய மகளிர் வில்வித்தை அணி! -பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற பஜன் கவுர் 11, அங்கிதா பகத் 22 மற்றும் தீபிகா குமாரி 23-வது இடத்தை பிடித்தனர். புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி நான்காம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
மும்பை, புனே கனமழை - வெள்ளம்: மகாராஷ்டிராவின் புனே, மும்பை நகரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்திருக்கும் நிலையில், கனமழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை நகர் பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்வதால் வெள்ளநீர் தேங்கி, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் பல கிலோ மீட்டருக்கு மெதுவாக ஊர்ந்து செல்லும் சூழல் நிலவுகிறது.
அதேபோல், புனேவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை பாதிப்பு சம்பவங்களால் 4 பேர் உயிரிழந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரு நகரங்களில் இரவு பகலாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.