டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 100 சதவிதம் தமிழ்நாட்டிற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 அலகுகள் மூலம் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதலிரண்டு அலகுகளில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் என 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு 925 மெகாவாட், கர்நாடகாவிற்கு 442 மெகாவாட், கேரளாவிற்கு 266 மெகாவாட், புதுச்சேரிக்கு 67 மெகாவாட் மற்றும் ஒதுக்கீடு செய்யப்படாத 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே விரைவில் 3 மற்றும் 4வது அலகுகளில் மின் உற்பத்தி துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இங்கு தலா 1000 மெகாவாட் மின்சாரம் என, 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி வில்சன் இது தொடர்பாக, மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
3 மற்றும் 4வது அலகுகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை 100 சதவீதம் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது 55 சதவீதம் அளவிற்கு மட்டுமே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்யவும், மின்வெட்டு ஏற்படாமல் தடுக்கவும், 3 மற்றும் 4வது அலகுகளில் தயாரிக்கப்படும் 100 சதவீத மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
» மோசடிகளை தடுக்க தேர்வு முறையில் மாற்றம்: யுபிஎஸ்சி நடவடிக்கை
» திருமண வதந்தி - விஜய் ஸ்டைலில் பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ்!