பேருந்து நிலையங்கள் முன்பாக ஆம்னி பேருந்துகளை நிறுத்தினால் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: பேருந்து நிலையங்களுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகளை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு தடங்களில் இயக்குவதற்கான நகரப் பேருந்துகள், வெளி மாவட்டங்களுக்கு இயக்குவதற்கான 15 புதிய பேருந்துகள், சென்னை உள்ளிட்ட தொலை தூரங்களுக்கு இயக்குவதற்கான 8 புதிய கூண்டு கட்டமைக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகளின் இயக்கத்தை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று கும்பகோணத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கும்பகோணம் மண்டலத்தில் 23 புதிய பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. மேலும், 7,200 பேருந்துகள் வாங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பழைய பேருந்துகளின் அடித்தட்டுக்கள் சிறப்பாக உள்ளதில், புதியதாக கூண்டு கட்டமைக்கப்பட்ட 1,500 பேருந்துகளில் 800 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளது. 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 200 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல்கட்டமாக 30 விரைவுப் பேருந்துகள் அடுத்த வாரத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.” என்றார்.

மேலும், “தமிழக போக்குவரத்துத் துறை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் சீர்குலைந்திருந்தது. அதையெல்லாம் சரிசெய்து மீண்டும் இந்தத் துறை மறுமலர்ச்சியுடன், சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, விரைவில் அதற்கான பேருந்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையங்களின் முன்பு நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ-க்கள் சாக்கோட்டை க.அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன், மேயர்கள் க.சரவணன், சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE