தோற்ற பிறகும் பாஜக பாடம் கற்றுக்கொள்ளவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

By துரை விஜயராஜ்

சென்னை: மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் தோற்ற பிறகும் பாஜக பாடம் கற்றுக்கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வு மற்றும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் இடம் பெறாததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், எஸ்.வெள்ளைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஹெலன் தேவகிருபை, வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “பாஜக தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. பாஜக ஆளாத தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளை மத்திய அரசு பழி வாங்கியிருக்கிறது. தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வி அடைந்த பிறகும் பாஜக பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாததால், பாஜக அரசு தமிழகத்தை கைவிட்டிருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளமுடியாது.

பாஜகவுக்கு ஓட்டு போடாத மக்களை தண்டிப்பது நியாயம் கிடையாது. மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜகவின் பழிவாங்கும் போக்கை எதிர்த்து போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாராக இருக்கிறது. மத்திய அரசுதான் உதய் திட்டத்தை கொண்டு வந்து, ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று, மாநில அரசுகளை கட்டாயப்படுத்துகிறது. உதய் திட்டத்தின் அடிப்படையில்தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின் கட்டண உயர்வு, உழைப்பாளிகளை, ஏழை எளிய நடுத்தர மக்களை, சிறு வியாபாரிகளை கடுமையாக பாதிக்கிறது. மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி என்ற திட்டங்கள் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அமலுக்கு வந்தது. இது போன்ற பல திட்டங்கள் மக்களுக்கு பயன்படுகிறது. நலத்திட்டங்களால் மக்களுக்கு அளிக்கக்கூடிய சலுகைகளை, மின் கட்டண உயர்வு போன்ற திட்டங்கள் மூலம் பறிக்கக்கூடாது. எனவே, இந்த மின் கட்டண உயர்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE