மதுரையில் கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து; ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பிரபல கொரியர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மதுரை, கப்பலூர் தொழிற்பேட்டையில் ‘சேஃப் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் கொரியர் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் கண்ணாடி, துணி வகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பார்சல்கள் இந்த கொரியர் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இங்கு கூடுதல் வசதிகளை மேம்படுத்த நேற்று வயரிங் வேலைகள் நடந்துள்ளன. அந்தப் பணிகள் முடிந்து வழக்கம் போல் இரவு 9 மணிக்கு கொரியர் நிறுவனம் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவில் அந்த நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பார்சல் பொருட்கள் அனைத்தும் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து பார்சல்களை ஏற்றி, இறக்க வந்திருந்த லாரிகள், மினி வேன்களும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் இரவு 1 மணி வரை போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமடைந்திருப்பதாக திருமங்கலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE