சென்னை: “பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்து போலீஸார் தயவு செய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள்” என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வாக்கி டாக்கியில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் டவுட்டன் பாலம் கீழ் பகுதியில் போக்குவரத்து போலீஸார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீஸார் லஞ்சம் பெற்றனர்.
கையில் பணம் பெற்றால் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக, மஞ்சள் நிற பை ஒன்றை தொங்க விட்டு, அதில் லஞ்சப் பணத்தை போடச் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, லஞ்சப்பணம் பெற்றதாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 போக்குவரத்து போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் எதிரொலியாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் போக்குவரத்து போலீஸாருக்கு வாக்கி டாக்கியில் எச்சரிக்கை விடுத்து கூறியதாவது: போக்குவரத்து போலீஸார் லஞ்சம் உட்பட வேறு ஏதேனும் குற்றச்சாட்டில் சிக்கினால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். போக்குவரத்து பிரிவில் பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் காவலர்கள் தயவு செய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்றுவிடுங்கள்.
» உதய் மின் திட்ட நன்மை குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - தங்கம் தென்னரசுக்கு தங்கமணி சவால்
ஒருவர் செய்யும் தவறுகளால் ஒட்டு மொத்த போக்குவரத்து காவல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. ஒரு சில செய்திகளை பார்க்கும் பொழுது மிகவும் அசிங்கமாக உள்ளது. நல்ல செயல்கள் மூலம் ஒரு படி மேலே சென்றால், 4 படி கீழே இறக்கிவிட்டு விடுகிறீர்கள். இது நல்லது அல்ல. போக்குவரத்து போலீஸாரை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். தவறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.