திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கதிரியக்க அவசர நிலை முன்னேற்பாடுகள் மற்றும் பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணு உலைகளில் மின் உற்பத்திக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கதிரியக்கத் தன்மை கொண்ட எரியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்களும் கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணுமின் நிலைய சுற்று வட்டார பகுதிகளில் கதிரியக்கத் தன்மை கொண்ட ஏதாவது ஒரு பொருள் அந்தப் பகுதியில் கிடைக்கப்பெற்று அதன் மூலம் கதிரியக்கத் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலிருந்து பொதுமக்கள் மற்றும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது பற்றிய கதிரியக்க அவசர நிலை முன்னேற்பாடுகள் மற்றும் பேரிடர் ஒத்திகை பயிற்சி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் தலைமை வகித்தார். கதிரியக்கம் ஏற்பட்டால் மக்கள் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் விளக்கிக் காண்பிக்கப்பட்டது. கதிரியக்கம் ஏற்படும் பகுதியில் பொதுமக்கள் செல்லவோ அல்லது கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற உடனடியாக தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் அருகில் செல்லவோ கூடாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
» ஐஐடி-யில் இடம் கிடைத்தும் நிதி பிரச்சினையால் ஆடு மேய்த்த பழங்குடியின மாணவி: முதல்வர் உதவிக்கரம்
தேசிய பேரிடர் மேலாண்மை மூத்த விஞ்ஞானிகள் ரஜினி, அபிஷேக் ஆகியோரும் தேசிய பேரிடர் மீட்புப் படை உதவி கமாண்டர் ஸ்ரீதர், தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவின் முருகானந்தம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், சுகாதாரத்துறையினர், கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வக குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.