காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.306 கோடி வசூல்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்

By துரை விஜயராஜ்

சென்னை: காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.306 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘டாஸ்மாக் நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து சில்லறை மதுபான வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது. இது தமிழ்நாடு அரசின் வருவாயில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்களிப்பைச் செய்து வருகிறது. இந்த சில்லறை மதுபான விற்பனைப் பிரிவில் விற்கப்படும் மதுபானங்களின் காலி பாட்டில்கள் வயல்வெளிகள், யானை வழித்தடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் எறிந்து வருவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் வாழும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைத்த கமிட்டி ஆய்வு செய்து, ‘மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது கூடுதலாக பாட்டிலுக்கு தலா ரூ.10 பெற்று, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது வசூலிக்கப்பட்ட ரூ.10-ஐ திரும்ப வழங்கலாம்’ என்று யோசனை தெரிவித்தது. இந்த யோசனையை அமல்படுத்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவை டாஸ்மாக் நிறுவனம் ஏற்று, மலைப்பகுதிகளில் உடனடியாக செயல்படுத்தத் தொடங்கியது. இந்தப் பணியை தற்போதுள்ள பணியாளர்கள் மூலம் செயல்படுத்துவது, அவர்களது வேலைப்பளுவால் நடைமுறை சிரமங்களை உருவாக்கியது.

மேலும், பணியாளர்கள் பல்வேறு தொற்று நோய் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக, காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் பணிகளுக்காக தனியாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம், மதுபானங்கள் விநியோகிக்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களே, பணியாளர்களை நியமனம் செய்து காலிப் பாட்டில்களை பெற்று, எடுத்துக்கொள்ளும்படியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.306 கோடி வசூலித்து, ரூ.297 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இவை எதையும் அறியாமல் எதிர்கட்சித் தலைவர் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு என்று கூறியிருப்பது அவரது ஆதரவு ஒப்பந்ததாரர்கள் குரலை எதிரொலிப்பதாகும். பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரத்தில் இருந்த காலங்களில் அலட்சியம் செய்து விட்டு, இன்று அரசின் வருவாய் இழப்பு குறித்து கூக்குரல் எழுப்பவது அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE