சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் ஆட்சியை காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நேற்று 2024-25ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை வெளியிட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு போன்ற வார்த்தைகள் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டதற்கும், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் இடம்பெறாததற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும் பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று அக்கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோவை பதிவிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
» யூடியூபர் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது!
» பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் - ஆஸ்திரேலிய போலோ வீரர்கள் 2 பேருக்கு கரோனா
அதில், ‘ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. ”தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.