இந்திய பெண்களின் தேவி மாயாவதி: பிறந்த நாள் பாடல் வரிகளால் சர்ச்சை

By ஆர். ஷபிமுன்னா

ராகுல் காந்தியை உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், ராமர் எனக் குறிப்பிட்ட சர்ச்சை முடியும் முன் பகுஜன் சமாஜின் (பிஎஸ்பி) தலைவி மாயாவதியை கவுதம புத்தர் மற்றும் தேவியின் அவதாரம் என அவரது கட்சியினர் குறிப்பிட்டுள்ளது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மாயாவதிக்கு ஜனவரி 15-ல் வரும் பிறந்தநாளை ஒட்டி, எழுதப்பட்ட பாடலின் வரிகளாக இடம் பெற்றுள்ள இந்த வரிகள் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பெஹன்ஜி என தம் கட்சிக்காரர்களால் அழைக்கப்படும் மாயாவதி மீதான இப்பாடலில், ’இந்திய அரசியல் தலைவர்களில் பெஹன்ஜியே சிறந்தவராக முதல் இடம் பெற்றுள்ளார். அவரது பெயர் உலகின் சிறந்த தலைவர்களில் ஒன்றாக உள்ளது. தன்னிடம் உள்ள துணிவின் காரணமாக அவர் இரும்புப்பெண் என்றழைக்கப்படுகிறார். இந்தியப் பெண்களால் அவர் தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறார் ’ என்ற ரீதியில் வரிகள் இடம் பெற்றுள்ளன.

பிஎஸ்பியினருக்கு இப்பாடலை எழுதியது யார் எனத் தெரியவில்லை. இது அக்கட்சியைச் சேர்ந்த பலரால் எழுதப்பட்டு, பாலிவுட்டின் பிரபல பாடகரான கைலாஷ் கேர் என்பவரால் பாடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை டெல்லியில் தனது பிறந்தநாளை மாயாவதி கொண்டாடும்போது வெளியிட வேண்டும் என அம்மாநில தலைவர் லக்‌ஷமன் சிங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். எனினும், அப்பாடலை பிரபலமாக்கும் பொருட்டு திட்டமிட்டு பிஎஸ்பியினரால் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘காமதேனு’ இணையத்திடம் பிஎஸ்பியின் செய்தித்தொடர்பாளரான தரம்வீர் சவுத்ரி கூறுகையில், " மனித உருவில் கடவுளாக இருக்கிறார் மாயாவதிஜி. அவரை எங்கள் கட்சியினர் வணங்குகின்றனர். அவரும் கடவுள் ராமர் உதவியது போல் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உதவி வருகிறார்" எனத் தெரிவித்தார்.

இந்தப் பாடலை டெல்லியின் பிஎஸ்பி பிரிவின் மூலம் உபியின் அனைத்து பிஎஸ்பி கிளைகளுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். இதை ஜனவரி15-ம் தேதி முதல், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் தவறாது ஒலிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உபியில் ஐந்து முறை முதல்வராக இருந்த மாயாவதியின் பிறந்தநாளை அவரது கட்சியினர், பொதுமக்கள் நலநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை முக்கிய இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி விமரிசையாகக் கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக தனது பிறந்தநாளின் போது மாயாவதி தனது கட்சியினரிடம் நிதி வசூலிப்பது சர்ச்சையாகும். இம்முறை அவரை வாழ்த்திப் பாடும் பாடலால் பிறந்த நாளுக்கு முன்பே சர்ச்சை வெடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE