திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு: இடம் ஆய்வு

By KU BUREAU

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதனால் அவரது ரசிகர்களும், அக்கட்சியின் தொண்டர்களும் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தீவிரம் காட்டினர். கட்சியைத் தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், சென்னையில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய் பகிரங்கமாக பேசினார். இதனால் தவெக கட்சியில் அரசியல் மாநாடு எப்போது என்று அவரது கட்சியினர் கேட்டு வந்தனர். இந்நிலையில், அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம், சிறுகனூரில் இந்த மாநாட்டை நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்த பகுதியில் நேற்று மாலை நிர்வாகிகளுடன்
ஆய்வு செய்தார். இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக கொண்டு களமிறங்கியுள்ள நடிகர் விஜய், திருச்சியில் நடைபெறும் முதல் அரசியல் மாநாட்டின் மூலம் மக்களுக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன கேள்வி தற்போதே அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்காக 'கோட்' மற்றும் மற்றொரு புதிய படத்தையும் முடித்துவிட்டு தனது முழு கவனத்தையும் அரசியலில் செலுத்த நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE