மத்திய அமைச்சரவையில் மாற்றம்: தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்களுக்கு வாய்ப்பு!

By ஆர். ஷபிமுன்னா

நாடாளுமன்றத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2023-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பாஜக எம்பிக்களுக்கு அமைச்சராகும் வாய்ப்புகள் தெரிகின்றன.

வரும் 2024 மக்களவை தேர்தலின் அரை இறுதிப்போட்டியாக இந்த வருடத்தில் நடைபெறவுள்ள 10 மாநில சட்டப்பேரவை தேர்தல் அமைந்துள்ளன. இதனால், அவற்றில் வெற்றிபெற, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தீவிரம் காட்டுகிறது. இதற்காக, மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் அக்கட்சி விரும்புகிறது. இதில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் கூடவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக மாற்றத்திற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.

இது குறித்து ‘காமதேனு’ இணையத்திடம் மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் கூறும்போது, ‘செயல்படாத அமைச்சர்களை பிரதமர் மோடி தொடர்ந்து தம் அமைச்சரவையிலிருந்து நீக்கி வருகிறார். எனவே, இந்தமுறையும் அதுபோன்றவர்களுடன், வயது மூத்த சில அமைச்சர்களும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் 10 மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களிலும் களம் இறக்கப்படுவார்கள். இதில், தமிழகத்திற்கும் கட்டாயமாக ஒரு அமைச்சர் பதவி உண்டு' எனத் தெரிவித்தனர்.

கடைசியாக மோடி அமைச்சரவை கடந்த வருடம் ஜுன் 8-ல் மாற்றி அமைக்கப்பட்டது. இதில், 12 அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டனர். அதேவகையில் இந்தமுறையும் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளனர். இதில், மக்களவை எம்பிக்களுக்கும், குறிப்பாக ரிசர்வ் தொகுதியை சேர்ந்த பெண் எம்பிக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டமும் சமீபத்தில் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

கட்சியிலும் மாற்றம்

அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து இதேபோன்ற மாற்றங்களை கட்சியிலும் பாஜக செய்ய உள்ளது. குறிப்பாக இதன் தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இந்த மாதம் நிறைவுபெற உள்ளது. மொத்தம் மூன்று வருட அவரது பதவிக்கு மேலும் ஒருமுறை நீட்டிப்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கு பாஜக வின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் நட்டாவிற்கு நல்ல புரிந்துணர்வு இருப்பது காரணம்.

அமித்ஷாவிற்கும் வாய்ப்பு

பாஜக தலைவர் நட்டாவுடன் தேசிய அளவில் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் புதிதாக அமர்த்தப்பட உள்ளனர். இதன் இறுதி முடிவு வரும் ஜனவரி 16, 17 தேதிகளில் நடைபெறவிருக்கும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. மத்திய அரசின் பதவிக் காலம் வரும் மே 2024-ல் முடிவடைகிறது. அதன் பிறகு பாஜக தலைவர் நட்டாவுடன் இணைந்து தேர்தல் ஆலோசனை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமைச்சர் அமித்ஷா தேர்தல் பொறுப்பாளராக இருந்து கட்சிக்கு வெற்றியை தேடித்தந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE