கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட் முதல் பிஹாருக்கு மத்திய அரசு ‘கைவிரிப்பு’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் அலர்ட்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கேரளாவில் மேலும் சிலருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இதுகுறித்து கூறும்போது, “நிபா வைரஸால் இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 350 பேரின் தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது, அந்த தொடர்புப் பட்டியலில், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர் உள்ளதாக தெரிகிறது. 101 பேருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 68 சுகாதாரப் பணியாளர்களும் இதில் அடங்குவர். நோய்வாய்ப்பட்ட பின்னர் அச்சிறுவன் பயணித்த தனியார் பேருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறுவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்தப் பரிசோதனை முடிவுக்காக அரசு காத்திருக்கிறது. இறந்த சிறுவனின் பெற்றோருக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும், நாங்கள் அவர்களின் மாதிரிகளையும் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். மொத்தம் 13 மாதிரிகள் இன்று சோதனைக்கு அனுப்பப்படும். மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்” என்றார்.

நோய்த் தொற்றுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வவ்வால்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்வதற்காக தேசிய வைராலஜி நிறுவனத்தின் குழு ஒன்று வரவுள்ளது. முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸுக்கு பைடன் ஆதரவு: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட நிலையில் தேர்தலில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக ஆதரவு தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம். இருந்தாலும் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். எஞ்சி உள்ள எனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன். இது ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து நான் எடுத்துள்ள முடிவு. இது குறித்து விரைவில் விரிவாக பேசுவேன்.

நான் மீண்டும் அதிபராக வேண்டும் என ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது அமெரிக்க மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி” என பைடன் தெரிவித்துள்ளார்.

நீட் முறைகேடு விவகாரம்: மக்களவையில் காரசார விவாதம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மக்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவின் தேர்வு முறைகளில் பெரிய பிரச்சினை உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். பணம் இருந்தால், தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த உணர்வு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கம் என்ன செய்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, “நீங்கள் கத்தினால் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் தேர்வு முறை குப்பை என்று அழைக்கும் ராகுல் காந்தியின் பேச்சை நான் கண்டிக்கிறேன். 2010-ல் காங்கிரஸ் அரசின் கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அமைச்சர் கபில் சிபல் கொண்டு வந்தார். யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தத்தால் வாபஸ் பெறப்பட்டதா?” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்தார்.

ஆன்லைனில் கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி திட்டம்: கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்துக்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல்முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

சுயசான்று அடிப்படையில் கட்டிடங்களுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதிக்கான காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘பொறியியலில் விளையாட்டு வீரர்களுக்கு 2% ஒதுக்கீடு’ - பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், “விளையாட்டு வீரர்களுக்கு பொறியியல் படிப்பில் அடுத்த ஆண்டு முதல் 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்,” என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பொறியியல் கல்லூரிக்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் மொத்தம் 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 6.5 - 7% ஆக உயரும்’ - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில்,
2024-25-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கம் இந்த நிதியாண்டின் இது 4.5 சதவீதமாகக் குறையக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கள் விற்பனை தடை - பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு: தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல்: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட்தாக்கல் செய்தவர் என்ற புதிய சாதனை படைத்து, மொரார்ஜிதேசாயின் சாதனையை முறியடிக்கிறார். முந்தைய ஆண்டுகள் போல, இந்த முறையும் காகிதமில்லா முறையில் டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

‘மத்திய பட்ஜெட் செல்போன் செயலி’யில் பட்ஜெட் உரை இடம்பெறும். இது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இருக்கும். மத்திய பட்ஜெட் இணையதளத்தில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றதால், வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்துள்ளதால் முழு பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுப்பு: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம்பிரித் மண்டலுக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், “மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினர் கணிசமாக வசிப்பது, அண்டை நாடுகளுடனான எல்லையில் இருக்கக் கூடிய மாநிலங்கள், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, போதிய அளவு நிதி ஈட்டுவதற்கு சாத்தியமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இத்தகைய காரணிகள் மற்றும் மாநிலத்தின் மாறுபட்ட சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பிஹாரின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பரிசீலித்த மத்திய அமைச்சர்கள் குழு, 30 மார்ச் 2012 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போதுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் அளவுகோல்களின் அடிப்படையில், பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்பதைக் கண்டறிந்தது” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஐக்கிய ஜனதா தளத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் தவிர, சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரியுள்ளது. கடந்த 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு புதிதாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் காரணமாக இந்த கோரிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தி வருகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விட இது குறைவு. பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இரண்டும் இணைந்து 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

ஹர்திக் கேப்டன்சி - அகார்கர் விளக்கம்: “ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை அவர் அபார திறன் கொண்ட வீரர். ஆனால், ஃபிட்னஸ் சார்ந்து சில சவால்கள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஆடக்கூடியவர் வேண்டும் என்ற முறையில் கேப்டன்சி திறன் கொண்ட சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE