திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி திருவாரூர் அருகே உள்ள அவரது பூர்வீக ஊர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் திடீரென விலகியதால் இந்த வாய்ப்பு கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார்.
கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவரது தாத்தா பி.வி.கோபாலன் தட்டச்சு பணியாளராக பணியாற்றியுள்ளார். ஜாம்பியா நாட்டிற்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது குடும்பத்துடன் சென்ற அவர், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். இவரது இரண்டாவது மகளான ஷியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் ஆவார்.
கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் கமலா ஹாரிஸ். இவரின் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸின் உறவினர்கள் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் தற்போதும் வசித்து வருகின்றனர். அவர்களது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலுக்கு, கமலா ஹாரிஸ் நன்கொடை அளித்துள்ளார். இது தொடர்பான விவரம் அந்த கோயிலின் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
» முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு: ஆளுநர் விசாரணைக்கு வலியுறுத்தும் நாராயணசாமி
» நிபா வைரஸ் தொற்றால் கேரளாவில் சிறுவன் உயிரிழப்பு - தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!
தற்போது அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, துளசேந்திரபுரம் கிராமத்தில் வசித்து வரும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு சிறப்பு பூஜைகளை அவரது பூர்வீக கோவிலில் மேற்கொண்டுள்ளனர். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் கமலா ஹாரிஸ் துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தர வேண்டும் எனவும் அவர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.