தாம்பரம் பணிமனை சிக்னல் மேம்பாட்டு பணி: நாளைமுதல் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம்!

By மு.வேல்சங்கர்

சென்னை: தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாட்டு பணி காரணமாக, நாளை முதல் விரைவு, மின்சார ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளன.

தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாட்டு பணி காரணமாக மொத்தம் 28 விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இவற்றில் பெரும்பாலான விரைவு ரயில்களின் சேவையில் ஜூலை 31-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் ஆக.14-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன. தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாட்டு பணி உள்பட பல்வேறு பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, பல்வேறு விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு,

முழுமையாக ரத்து:
தாம்பரம் - நாகர்கோவிலுக்கு ஜூலை 23-ம் தேதி முதல் 31ம்- தேதி வரை இரவு 11 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் ( 20691), நாகர்கோவில் - தாம்பரத்துக்கு ஜூலை 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20692) ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து:
சென்னை எழும்பூர் - மதுரைக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 31ம்- தேதி வரை தினசரி புறப்பட வேண்டிய வைகை விரைவு ரயில் (12635), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - திருச்சிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மலைக்கோட்டை விரைவு ரயில் (12653), பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து ஜூலை 24ம் தேதி முதல் ஆக.1-ம் தேதி வரை அதிகாலை 12.40 மணிக்கு புறப்படும்.

காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை தினசரி காலை 5.35 மணிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (12606), செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்படும். எனவே, இந்த ரயில் செங்கல்பட்டு நிலையத்தில் நிறுத்தப்படும். இதுபோல மொத்தம் 26 விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளன.

இதுதவிர, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் 55 மின்சார ரயில்களின் சேவை நாளை முதல் ஆக.14ம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள புறநகர் ரயில்நிலையங்களில் இதுதொடர்பாக அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும். இதை பார்த்து, அதற்கு ஏற்ப பயணத்தை பயணிகள் திட்டமிட வேண்டும்’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE