2023ல் நடைபெறவுள்ள திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிபுராவில் 2023ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 24 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி செய்த சிபிஎம் கட்சி, 2018 தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்தது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், சிபிஎம் தனது ஒரே வடகிழக்கு கோட்டையான திரிபுராவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக காங்கிரஸுடனான கூட்டணிக்கு சாத்தியங்கள் குறித்து விவாதிக்க சிபிஎம் பொலிட்பீரோ கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதேபோல், அடுத்த மாதம் அகர்தலாவில் மாநில பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சிபிஎம் கட்சியால் கூட்டணி பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அது காங்கிரஸுடன் தொடர்பு கொண்டு, தேர்தலுக்கு முன் திரிபுராவில் தொகுதிப் பங்கீடு பற்றி விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக- ஐபிஎஃப்டி கூட்டணி 43 இடங்களை வென்றது. அதில் பாஜக 35 இடங்களையும், ஐபிஎஃப்டி 8 இடங்களையும் கைப்பற்றியது. சிபிஎம் கட்சிக்கு சட்டமன்றத்தில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். ஜூன் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
சுமார் 20 ஆண்டுகள் திரிபுராவில் மாணிக் சர்க்கார் வெற்றிகரமான முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அவரை கட்சியின் முகமாக முன்னிறுத்தவது குறித்தும் சிபிஎம் பொலிட்பீரோ விவாதிக்க உள்ளது. காங்கிரஸுடன் வெளிப்படையான கூட்டணி அமைப்பது சிபிஎம்-க்கு அவ்வளவு சுலபமானதாக இருக்காது. ஏனெனில் கேரளாவில் காங்கிரஸ் கட்சி, ஆளும் இடதுசாரிகள் கூட்டணியின் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.