நிபா வைரஸ் தொற்றால் கேரளாவில் சிறுவன் உயிரிழப்பு - தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!

By KU BUREAU

வாளையார்: கேரளாவில் நிபா வைரஸ் தொற்று காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறையினர் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வாளையார் சோதனைச் சாவடியில் இன்று முதல் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை ஊழியர்கள், பேருந்து, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபடுகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு உடல் பாதிப்புகள் உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதாரத் துறையினர் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 5வது முறையாக கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கேரளா மாநில எல்லைகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE