‘இது பொங்கல் தொகுப்பு அல்ல, பொய் தொகுப்பு’ - அண்ணாமலை காட்டம்

By காமதேனு

திமுக கொடுப்பது பொங்கல் தொகுப்பு அல்ல. பொய் தொகுப்பு. 2024 தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு முடிவுரை எழுதுவார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தெரிவித்தது. ஆனால் ஏன் செய்யவில்லை? மின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பதாக திமுகவினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். அதற்கான ஒரு கடிதத்தைக் காட்டுங்கள். மின்வாரிய நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள்? எதனால் நஷ்டம் அடைந்தது எனச் சொன்னால் மக்களும் தெரிந்துகொள்வார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் 67 சதவீதம் பேர் சமையல் கேஸ் பயன்படுத்தினர். தற்போது 99.3 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். முன்பைவிட இருமடங்காக இறக்குமதி செய்ய வேண்டி இருந்த போதிலும் மத்திய அரசு போராடி கியாஸை குறைந்தவிலைக்கு கொடுத்துவருகிறது. நிகழாண்டில் பொங்கல் தொகுப்பில் கரும்பும், பனைவெல்லமும் கொடுக்கவில்லை. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள். ஆளும்கட்சியாக இருக்கும்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.

இது பொங்கல் தொகுப்பு அல்ல. பொய் தொகுப்பு. அமைச்சர் எ.வ.வேலு சர்க்கரை கொடுத்தால்தான் மக்கள் சர்க்கரைப் பொங்கல் வைத்துச் சாப்பிடுவார்கள் என்கிறார். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு 2024ல் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.”என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE