பள்ளி மாணவர் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி குஜராத் விடுதியில் தற்கொலை

By KU BUREAU

மதுரை: மதுரையில் பள்ளி மாணவர் கடத்தல் வழக்கில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி, குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்துவது தொடர்பாக மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இவரது 14 வயது மகன், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற சிறுவனை, ஆட்டோ டிரைவருடன் சேர்த்து கடத்திய கும்பல், ரூ.2 கோடி பணம் தரவேண்டும் என்று சிறுவனின் தாயாரை மிரட்டியது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்டனர்.

மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த தேனி செந்தில் குமார்(45), தென்காசி வீரமணி (30), காளிராஜ் (36), நெல்லை அப்துல் காதர் (38) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில்,மாணவர் கடத்தலில் எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவி சூர்யா, அவரது நண்பர் தூத்துக்குடி மகாராஜன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களைப் போலீஸார் தேடி வந்தனர்.

இதற்கிடையில், குஜராத் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சூர்யா தற்கொலை செய்துகொண்டதாக நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, குஜராத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சூர்யா, தற்கொலை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கணவரைப் பிரிந்த நிலையில், மாணவர் கடத்தல் வழக்கில் சிக்கிய விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும்,அவர் தற்கொலை செய்துகொண்ட தகவலை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம் என்றனர்.

சூர்யாவின் தாயார் புகார்: இதற்கிடையே, சூர்யாவின் தாயார் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகள் தற்கொலைக்கு மைதிலி ராஜலட்சுமி உள்ளிட்டோர் கார ணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE