ராயப்பேட்டை - ஆர்.கே.சாலை இடையே மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

By KU BUREAU

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதவிர, பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை மற்றும் உயர் மட்டப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்.கே. சாலை) நோக்கி 910 மீட்டர் வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த பணியை மேற்கொள்ள பவானி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சுரங்கம் தோண்டும் பணியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராயப்பேட்டையில் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடந்து வரும் மெட்ரோ ரயில் நிலைய பணிகளையும் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஆலப் பாக்கத்தில் இரட்டை அடுக்கு மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகளை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். ஆலப்பாக்கம் இரண்டடுக்கு அமைப்பு இந்தியாவிலேயே முதலாவது வகை ஆகும். சுமார் 3.75 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ளஇந்த பாதையில் 4-வது மற்றும் 5-வது வழித்தடங்கள் செல்கின்றன.

தொடர்ந்து, பூந்தமல்லி அரியமந்தநல்லூர் கிராமத்தில் ரூ.187கோடியில் 40.5 ஏக்கர் நிலத்தில் உருவாகும் பூந்தமல்லி பணிமனைகட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துரிதமாக பணிகளை முடிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன் எம்.பி., அரசு முயற்சிகள் துறை முதன்மைச் செயலர் ஹர் சகாய் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலர் தாரேஸ் அகமத், சென்னை மெட்ரோ ரயில் திட்டஇயக்குநர் தி.அர்ச்சுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை: முன்னதாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து குழுமத்தின் ஆய்வில் உள்ள ஒருங்கிணைந்த நகர்வு திட்டமான பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பொதுவான நகர்வு அட்டை, பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பின் ஒருங்கிணைப்பு, சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து உயர் அலுவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.

இதுதவிர மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், சென்னை பெருநகருக்குள் உருவாக்கப்பட உள்ள எதிர்கால மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் அவற்றை நடைமுறைபடுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துஆய்வு மேற்கொண்டார். பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோனை நடத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE