பேரவை தேர்தலுக்காக கூடிய திமுக ஒருங்கிணைப்பு குழு

By KU BUREAU

சென்னை: திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்று, மாவட்டங்கள் பிரிப்பு, புதியவர்கள் நியமனம் ஆகியவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்ததும், தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்குழுவினர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் நேற்று மாலை6 மணிக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், அடுத்தகட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி நிலவரத்தை அறிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் தேர்தலில் தொகுதிகள் அடிப்படையில் பிரித்து நிர்வாகிகள் பணியாற்றும்வகையிலும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE