மத்திய அரசு நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: டெல்லியில் துறை செயலர் ஆலோசனை

By KU BUREAU

சென்னை: மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை, நிதி தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன், தமிழக ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மாநிலங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார்பில் 10 முக்கியமான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதமரின் குடியிருப்பு திட்டம் (ஊரகம்), பாரத தூய்மை இயக்கம் (ஊரகம்), பண்டைய பழங்குடியினருக்கான பிரதமரின் பெருந்திட்டம், எம்.பி.க்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், எம்.பி.க்கள் மாதிரி கிராமத் திட்டம், பிரதமரின் முன்னோடி கிராமங்கள் திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். இவ்வாறான திட்டங்களுக்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிதியை வழங்கி வருகிறது.

இந்த திட்டங்கள் தொடர்பாக அவ்வப்போது மாநில அரசு அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்தி, நிதி ஒதுக்குவதுவழக்கம். அந்த வகையில், மத்திய அரசு உதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக அண்மையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று, திட்டங்களின் செயல்பாடு, நிதித் தேவை குறித்து விளக்கினார்.

இந்நிலையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட கிராம சாலைகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய அரசு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE