தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டுகளில் சுற்றும் நாய்களால் மருத்துவமனைக்கு வருவோர் அச்சமடைந்துள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளும் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற தினமும் வந்து செல்கின்றனர். இது தவிர, அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலன், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, இதய நோய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்திலும், வார்டுகளிலும் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சை பெற பல நூறு பேர் வந்து செல்கின்றனர். இது தவிர, உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர், அவர்களுடன் தங்கியிருக்கும் உதவியாளர்கள், பல்வேறு சான்றிதழ்கள் பெற மருத்துவர்களை சந்திக்க வருவோர் என பலரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். புறநோயாளிகளுக்கான பிரிவுகள் அனைத்தும் பழைய கட்டிடத்தில் செயல்படுகிறது. உள்நோயாளிகள் பிரிவுகள் அனைத்தும் புதிய கட்டிடங்களில் செயல்படுகிறது.
பழைய கட்டிடத்தில் புற நோயாளிகள் சீட்டு வாங்கும் இடம் மற்றும் மருந்து, மாத்திரைகள் வாங்கும் இடங்களில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அதேபோல, பழைய கட்டிடத்தில் முன்பு புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பிரிவு இயங்கி வந்த கவுன்ட்டர் அருகே உள்ள வராண்டாவில் நாய்கள் படுத்து உறங்குகின்றன. மேலும், உள் நோயாளிகளுக்கான பிரிவுகள் இயங்கி வரும் புதிய கட்டிடத்தில் 2-ம் தளத்தில் குழந்தைகள் நலத்துறை பிரிவின் வராண்டாவில் நாய் ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த நாய் தரைத் தளத்தில் தொடங்கி 3-ம் தளம் வரை மாறிமாறி பயணிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைப்போன்ற சம்பவங்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் முன்பாக மருத்துவமனை நிர்வாகமும், தருமபுரி நகராட்சி நிர்வாகமும் விழித்துக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.