மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

சென்னை: மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 3ஆண்டுகளில் 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும். ஏற்கெனவே நலிந்துள்ள குறு, சிறு தொழில்கள் மேலும் பாதிப்படையும். திராவிட மாடல் அரசு, வலது கையில் மகளிர் உரிமை தொகையை வழங்கிவிட்டு மின் கட்டணத்தை உயர்த்தி அந்த தொகையை இடதுகையால் பறித்துக் கொள் கிறது.

மின்கட்டண உயர்வால் நூற்பாலைகள், விசைத்தறிகள் மூடும் நிலை உருவாகி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். மின்வாரிய கடன் சுமைக்கு தமிழக அரசின் நிர்வாக சீர்கேடே காரணம். மின் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமாகா கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பார்கள். இவ்வாறு ஜி கே வாசன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் கருப்புஉடை, கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். தமாகா மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE