திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பனை மரங்களுக்கு தீவைப்பு: சமூக ஆர்வலர்கள் கவலை

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பனை மரங்கள் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய நபர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரிலிருந்து இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், விளமல் பகுதியின் இடதுபுறத்தில் தொடர்ச்சியாக பனை மரங்கள் உள்ளன. அதனைத் தாண்டி தனியார் கட்டிடங்கள் உள்ளன. பல விளைநிலங்கள், வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், சாலை ஓரத்தில் உள்ள பனை மரங்களை வெட்டினால் தான் பார்வையாக இருக்கும் என்ற சூழல் உள்ளது.

இந்தநிலையில் சாலை ஓரத்தில் உள்ள பனை மரங்கள் மர்ம நபர்களால் அவ்வப்போது வெட்டப்படுகின்றன. பனைமரங்களை வெட்டுபவர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியும் திருவாரூர் விளமல் பகுதியில் வெட்டப்படும் பனை மரங்கள் குறித்து இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை.

இதனிடையே இன்று அதிகாலையில் பனை மரங்கள் உள்ள பகுதி முழுவதும் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உயிரோடு நின்ற பனை மரங்கள் பற்றி எரிய தொடங்கின. தகவல் அறிந்து வந்த திருவாரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.

பனைமரங்கள் பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பனை மரங்கள் வெட்டப்படுவது தொடர் கதையாகி வந்த நிலையில், இன்று காலை பனை மரங்களை அழிக்க புதிய யுத்தியாக மரங்கள் எரிக்கப்படும் சம்பவங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய நபர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE