மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
மதுரை உலகநேரியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு 2004-ல் தொடங்கப்பட்டது. மதுரை அமர்வின் 20-ம் ஆண்டு நிறைவு விழா தமுக்கம் அரங்கில் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், காணொலிக் காட்சி வாயிலாக உயர் நீதிமன்ற அமர்வு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20-வது ஆண்டு நினைவுத் தூணை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளில் கலாச்சாரத்தின் அடையாளமாக மதுரை அமர்வு திகழ்ந்து வருகிறது. அனைவருக்கும் நீதி கிடைப்பதை மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. இந்த அமர்வின் உத்தரவுகள், சமூக மாற்றத்தை ஏற்படுத்திஉள்ளன. குறிப்பாக, மனித உரிமைகள், பெண்கள், திருநங்கைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள், சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. நவீன வசதிகள் கொண்டமதுரை அமர்வு, இளம் வழக்கறிஞர்களின் திறமைகளை வளர்க்க உதவியாக இருந்துள்ளது.
நீதிமன்றங்களில் மொழிப் பிரச்சினை எழுந்தபோது, நீதிமன்ற உத்தரவுகளை அந்தந்த மாநில மொழிகளில் அறிந்துகொள்ளும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 2,000-க்கும் அதிகமான உத்தரவுகள், மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
» வாகன ஓட்டிகளிடம் வசூல்: கேளம்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம்
» இடஒதுக்கீடு கோரி பெரிய அளவில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்
இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் 2 ஆண்டுகள், மூத்த வழக்கறிஞர்கள் தொழில் கற்றுத்தர வேண்டும். நல்ல ஊதியம் வழங்க வேண்டும். ஏறத்தாழ 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இலக்கியக் கதாநாயகி கண்ணகி, தனக்குஇழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகமன்னர் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாதாடினார். எனவே, உலகின் முதல் பெண் வழக்கறிஞர் மதுரையைச் சேர்ந்த கண்ணகிதான்.
மதுரையில் ஆண்டுக்கு 4 மாதங்கள் மீனாட்சியம்மன் ஆட்சிநடைபெறும். இந்த 21-ம் நூற்றாண்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மதுரையில் அப்போதே அன்னை மீனாட்சிக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்குச் சிறப்பு மிக்க நகரம் மதுரை. இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.
காணொலிக் காட்சி வழியாக, ‘மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரைஅமர்வு’ என்ற தமிழ் பெயர்ப் பலகையை திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, மதுரை அமர்வு 20 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதேநேரம், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசும்போது, மதுரை அமர்வு அமைக்கப்பட்டதன் நோக்கம் சரியாகப் பயன்படுத்தப்பட்டு, மக்களின் நம்பிக்கை பெறப்பட்டுள்ளது. மதுரை அமர்வின் கொடி இன்னும் உயரப் பறக்க வேண்டும் என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, மதுரை அமர்வின் வரலாற்றில் இது ஒரு மைல்கல். மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக மதுரை அமர்வு திகழ்கிறது என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யாகாந்த், பி.ஆர்.கவாய், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் திலக்குமார், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜ், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.