வாகன ஓட்டிகளிடம் வசூல்: கேளம்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம்

By KU BUREAU

தாம்பரம்: டைரியில் எழுதி வைத்து லாரி ஓட்டுநர், உரிமையாளர்களிடம் மாமூல் வசூலில் ஈடுபட்ட கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் எல்லையில் லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து போலீஸார் பட்டியல் போட்டு மாமூல் வசூலிப்பதாக புகார் எழுந்தது. மேலும், மாமூல் தொடர்பான விவரங்களை டைரில் எழுதி வைத்திருப்பதாகவும் தகவல் வந்தது. வண்டலுார் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள கிரஷர்களுக்கு செல்லும் லாரிகளிடம் மாமூல் வேட்டை நடப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக, தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜை நேற்று பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார். போக்குவரத்து காவலர்கள் இருந்தும் அவர்கள் போக்குவரத்து பணியை சரிவர மேற்கொள்ளவில்லை.

விபத்து நடப்பதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் தொடர்ந்து வாகன ஓட்டிகள், லாரி உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். எனவே ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு போக்குவரத்தை சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்த உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE