விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவத்தையும், அது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் குறித்தும் தனது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக குறிப்பிட்டு, விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து, விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.ஜி.சூர்யா நேற்று ஆஜரானார். அவரிடம், சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாஜக நிர்வாகிகள், சிபிசிஐடி அலுவலகம் அருகில் குவிந்தனர்.
பின்னர், எஸ்.ஜி சூர்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில், இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர் என்றார்.
» எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு
» ரூ.1.50 கோடி இழப்பீடு கோரி பெண் வழக்கு: இஎஸ்ஐ நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு