எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

By KU BUREAU

சென்னை: எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகமான அன்பகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா, நா.இளையராஜா, கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட வாரியாக இளைஞரணி சமூக வலைதளப் பக்கத்தையும், மாவட்ட, மண்டல அமைப்பு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அமைப்பு நிர்வாகிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் புதிதாக தொடங்கப்பட்ட ‘உங்களுடன் உதயநிதி’ சமூக வலைதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இடத்துக்கு வந்துள்ளார் என்றால் அதற்கு அடித்தளமிட்டது இளைஞரணிதான். அரசியல் களத்தில் மக்களை சந்திப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மிகவும் முக்கியம். இக்கூட்டத்தில் முதல்வருக்கு துணையாக நான் வரவேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தீர்கள்.

செய்திகளில் வரும் வதந்திகள், கிசுகிசுக்களை படித்துவிட்டு வந்து, இது நடக்க போகிறது என நாமும் ஒரு துண்டு போட்டு வைத்துவிடலாம் என்ற அடிப்படையில் பேசியுள்ளீர்கள். முதல்வர் எந்த பொறுப்புக்கு சென்றாலும், இளைஞரணி செயலாளர் என்ற பொறுப்புதான் அவரது மனதுக்கு நெருங்கிய பொறுப்பு என்று பலமுறை கூறியிருக்கிறார். அதேபோல என்னை துணை முதல்வர் என்று பலர் கூறியபோதும் சொல்லியிருக்கிறேன், எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகத்தான் இருப்போம் என்று.

எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் எனது மனதுக்கு மிக நெருக்கமான பொறுப்பாக இருக்கும். அதை மறந்துவிட மாட்டேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் என்ன நடந்தாலும் சரி, எந்தெந்த கூட்டணி வந்தாலும் சரி ஜெயிக்க போவது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அதுமட்டுமே நமது இலக்காக கொண்டு உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொறுப்பு மாற்றமா? அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவிவரும் நிலையில், எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்கமாட்டேன் எனஅவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. இதனால் பொறுப்புகள் மாறுவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அதை முதல்வர்தான் முடிவெடுப்பார்” என தெரிவித்தார்.

ஸ்டாலின் வாழ்த்து: திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “ 45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அமைச்சர் உதயநிதிக்கு எனது பாராட்டுகள். கட்சிக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE