ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - அதிமுக கவுன்சிலர் அதிரடி கைது

By KU BUREAU

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளின் செல்போனை வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவரை கடந்த 5ம் தேதி ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடியது. தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் மேலும் 3 பேரை காவல்துறை கைது செய்தது. மேலும், இந்தக் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் இருந்த திருவேங்கடம் என்பவர் அண்மையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து அதிமுக நிர்வாகியான மலர்கொடி, தமாகா மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே கைதான அருளின் செல்போனை வைத்திருந்த கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் கைதான திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது 15 பேர் சிறையில் இருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE