மின் கட்டணத்தை ஏற்றிவிட்டு மத்திய அரசு மீது குறை சொல்வதா? - ஜி.கே.வாசன் ஆவேசம்

By KU BUREAU

சென்னை: தமிழக அரசு ஒரு கையில் மகளிருக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு, மறுபுறம் மற்றொரு கையில் மின் கட்டணத்தை ஏற்றி பிடுங்குகிறது என்றும், மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடப்பு ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, யூனிட்டுகள் வாரியாக பல்வேறு விகிதங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து தொடர்ந்து 3வது முறையாக மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கண்டனம் தெரிவித்து போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஜி.கே.வாசன் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டார். அவரது கட்சியினர் திரளாக பங்கேற்று மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், “திமுக அரசு 3 முறை மின் கட்டணத்தை ஏற்றி மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது. மின் கட்டண உயர்வு தொழில்முனைவோரை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் என கூறிய திமுகவின் நிலைப்பாடு என்ன ஆனது? என்று மக்கள் கேட்கிறார்கள். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது குறை சொல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வலது கையிலே மகளிருக்கு மாதம் ரூ.1000 கொடுக்கக் கூடிய தமிழக அரசு, மறுபுறம் இடது கையிலே மின்சார கட்டணத்தை உயர்த்தி அந்தப் பணத்தை பிடுங்க நினைப்பதுதான் திராவிட மாடலா?. மின் துறை சீர்கேட்டிற்கும், கடன் சுமைக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மாறாக பொதுமக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல.” இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE