'உங்கள் கட்சிக்கு அறிவு இருக்கிறதா?': தவறை ஒப்புக் கொண்டு சாந்தப்படுத்திய அண்ணாமலை!

By காமதேனு

புயல் வரும் நாளில் சென்னையில் சாலை தடுப்பில் பாஜக கட்சிக் கொடியைக் கட்டியதற்காக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பாஜகவினரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரை சாந்தப்படுத்தும் விதமாக அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணிக்குப் புயலாகத் தீவிரம் குறைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேன்டூஸ் புயல் காரணமாகச் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பூங்கா, விளையாட்டு மைதானம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலை தடுப்புகளில் பாஜகவினரின் கொடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளதற்கு அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். சாலை தடுப்பில் கொடிகள் நடப்பட்டிருக்கும் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, “புயல் வரும் நாள் அன்று இப்படி பிஜேபி கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன? காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “அண்ணா, உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE