சிவகாசி: சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் ஜூலை 23-ம் தேதி தொடங்க உள்ளதால் சோதனை அடிப்படையில் நேற்றும், இன்றும் அடைக்கப்பட்ட ரயில்வே கிராசிங் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் தினசரி இரு முறை ரயில்வே கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேட் திறந்தாலும், போக்குவரத்து சீராவதற்கு அரை மணி நேரமாவது ஆகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் இரட்டைப் பாலம் முதல் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை 12 அடி அகலத்தில் 700 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையடுத்து, மேம்பால பணிகள் நடக்கும் போது கனரக வாகனங்கள், பேருந்துகள், இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனித்தனியாக மாற்றுப்பாதை தேர்வு செய்யப்பட்டது. அதன்படி ரயில்வே கிராசிங் மூடப்பட்டு நேற்றும், இன்றும் சோதனை முறையில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று அனைத்து வாகனங்களும் ஒரே மாற்றுப்பாதையில் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், இன்று ரயில்வே கிராசிங் மற்றும் மாற்றுப் பாதையில் ஆய்வு செய்த அசோகன் எம்எல்ஏ, இரு சக்கர வாகனங்கள் மட்டும் ரயில்வே கிராசிங் வழியாக கடந்து செல்ல அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து இருசக்கர வாகனங்கள் வழக்கம் போல் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
» முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்ட வரையாடு மரணம்!
» கனமழை எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகம் மூன்று நாட்களுக்கு மூடல்!
இதுகுறித்து அசோகன் எம்எல்ஏ கூறுகையில், “மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்குவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே இரண்டு நாட்கள் ரயில்வே கிராசிங் மூடப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மேம்பால கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
இதனால் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இருசக்கர வாகனங்கள் மட்டும் ரயில்வே கிராசிங்கை வழக்கம் போல் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.