குமரியில் விடிய விடிய கனமழை - கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By KU BUREAU

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொட்டி வரும் கோடை மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக கனமழை தொடர்கிறது. இந்நிலையில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால் குமரி மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டியது. மலையோரப் பகுதிகள் மற்றும் அணை நீர் பிடிப்புபகுதிகளில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக பேச்சிப் பாறை, திற்பரப்பு உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. நேற்று வரை அதிகபட்சமாக பேச்சிப் பாறையில் 103.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோழிப் போர் விளையில் 82 மிமீ., திற்பரப்பில் 71, சிற்றாறு ஒன்றில் 64, தக்கலை, முள்ளங்கினாவிளையில் தலா 63, களியலில் 60, சிவலோகத்தில் 56, குழித்துறையில் 56, பாலமோரில் 52, ஆனைகிடங்கில் 45 மிமீ., மழை பெய்துள்ளது.

1,000 கன அடி நீர் திறப்பு: கனமழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 421 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் 500 கன அடி தண்ணீர் மறுகாலில் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நேர நிலவரப்படி பேச்சிப் பாறை அணையில் இருந்து1,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு அவர்கள் செல்லுமாறு பொதுப்பணித் துறை நீராதாரத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்: மலையோர பகுதிகளில் பெய்துவரும் மழை மற்றும் பேச்சிப் பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. கனமழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் குமரிக்கு மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, ஆற்றூர், ஏழுதேசப்பற்று உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டுள்ள இவர்கள் வெள்ளச் சேதம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். கடல் பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கடலோர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE