கனமழை எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகம் மூன்று நாட்களுக்கு மூடல்!

By ஆர்.டி.சிவசங்கர்

கன மழையின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் சுற்றுலா இன்று முதல் மூன்று நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இதன் காரணமாக, போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டு வருகிறது. சாய்ந்த மரங்களை தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனுக்குடன் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் உதகை குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை மற்றும் பலத்த காற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மூன்று நாட்களாக அவலாஞ்சி சுற்றுலா மையம், தொட்டபெட்டா காட்சி முனை மற்றும் பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாட்டில் கடந்த ஒரு வாரகாலமாக கனத்த மழை பெய்து வருவதன் காரணமாக, மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது.

மேலும் மழை தொடரும் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தெப்பக்காட்டில் இயங்கி வரும் முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் சுற்றுலா இன்று முதல் 22-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE