குமுளி: முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு நேற்று ஆய்வு மேற்கொண்டு, அணை பலமாக உள்ளதாகத் தெரிவித்தனர்.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து, உரிய முறையில் பராமரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் கண்காணிப்புக் குழுவை நியமித்தது. தொடர்ந்து, அந்தக் குழுவுக்கு உதவியாக, துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக, கொச்சியில் உள்ள மத்திய நீர்வள ஆணையச் செயற்பொறியாளர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகப் பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்புக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் கிரண் ஆகியோர் உள்ளனர்.
மழைக் காலங்களில் இந்த துணைக் குழு அணையை ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கையை தாக்கல் செய்யும். அதன்படி, இந்தக் குழுவினர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பேபி அணை, மெயின் அணை உள்ளிட்டவற்றையும் குழுவினர் பார்வையிட்டனர்.
» நீலகிரியில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
» சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் 6 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
கசிவுநீர் மணிக்கு 78 லிட்டர் அளவு மட்டுமே இருந்ததால், அணை பலமாக உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மதகுகளை இயக்கி சரி பார்த்தனர். மாலையில் குழு சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வு விவரங்களை அறிக்கையாக, கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்புவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 127.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,960 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1,335 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.