நீலகிரியில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

By KU BUREAU

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 5-வது நாளாக கனமழை நீடிக்கிறது. `ரெட் அலர்ட்' எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அவலாஞ்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ளநீர்நிலைகள் வேகமாக நிரம்பிவரும் நிலையில், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

கூடலூரை அடுத்த தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர் சூழந்தது. இதனால் அப்பகுதியினர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அல்லூர் வயல் பகுதியில் சூறாவளிக் காற்றால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கற்பூரம், சில்வர் ஓக் போன்ற ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், மின் விநியோகமும் தடைபட்டது. விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த 5 நாட்களாக மழை தொடர்வதால், கடும் குளிர்நிலவுகிறது. மலைக் கிராமங்களில் 2 நாட்களாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது என்றனர். வருவாய் துறையினர் கூறும்போது, பல பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள‌ ராட்சத மரங்கள், சூறைக்காற்றால் பெயர்ந்து விழுகின்றன. மின்கம்பிகள் மீதும், வாகனங்கள் மீதும் மரங்கள் விழுவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகிறோம். பேரிடர் அபாயத்தில் இருந்து மக்களை மீட்கும் வகையில் மீட்புக் குழுக்களும், முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

இந்நிலையில், நேற்று காலைமுதல் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. ஆனால், வானிலை மையம் நீலகிரி மாவட்டத்துக்கு `ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE