போடிமெட்டு மலைச் சாலையில் 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ஒரு மாதத்துக்குப் பின் மீட்பு

By என்.கணேஷ்ராஜ்

போடி: கடந்த மாதம் போடிமெட்டு மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் உருண்டு விழுந்ததில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இன்று அந்தக் காரை குரங்கணி போலீஸார் மீட்டனர்.

தேனி மாவட்டத்தில் தமிழகம் - கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் சுமார் 4,644 அடி உயரத்தில் இந்த வனப்பாதை அமைந்துள்ளது. பசுமைப் பள்ளத்தாக்குகளுடன் மூடுபனியின் தாக்கமும் இந்தச் சாலை வழியில் அதிகம் இருக்கும். இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் புதிய வாகன ஓட்டிகள் பலரும் இயற்கையை ரசித்தப்படி செல்வதால் வாகனங்கள் நிலைதடுமாறிவிடும்.

மேலும், செங்குத்தான சரிவுகளில் வேகமாக வாகனத்தை இயக்குவதாலும் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. கடந்த மாதம் கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்த சஞ்சீவிரெட்டி(50) தனது குடும்பத்துடன் இவ்வழியே காரில் வந்தார். மூணாறு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு ஜூன் 5-ம் தேதி போடிமெட்டு சாலையில் குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்தார் சஞ்சீவி ரெட்டி.

புலியூத்து அருகே 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்றார். கூடுதல் வேகம் காரை நிலைகுலைய வைத்தது. இதனால் கட்டுப்பாட்டை மீறி கார் பக்கவாட்டு ஸ்டீல் தடுப்பை உடைத்துக் கொண்டு 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சஞ்சீவிரெட்டி அதே இடத்தில் உயிரிழந்தார்.

அவரது மனைவி அம்பிகா (42), மகள் கீர்த்திகா (8), மகன் கரண் (11), உறவினர்கள் வைஷாலி (18), விஜய் (35), ஹர்சா (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தைப் பார்த்த வாகன ஓட்டிகளும், பயணிகளும் உடன் தீயணைப்பு மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். காயத்துடன் மீட்கப்பட்டவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தொடர் சிகிச்சையில் இருந்தனர்.

சம்பந்தப்பட்ட உறவினர்கள் சிகிச்சையிலும், சஞ்சீவிரெட்டி இறந்த துக்கத்திலும் இருந்ததால் பள்ளத்தில் விழுந்த காரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று பள்ள விழுந்த காரை மீட்கும் பணியில் குரங்கணி போலீஸார் ஈடுபட்டனர். இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. தன்னார்வலர்கள் உதவியுடன் பள்ளத்தில் கிடந்த கார் கிரேனில் இணைக்கப்பட்டு சாலை பகுதிக்கு தூக்கி வரப்பட்டது. மீட்புப் பணியால் போடி மெட்டு மலைச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE