சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதித்தது யார்? ஆட்சியரிடம் கொந்தளித்த விவசாயிகள்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: "விவசாயிகள் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டு, மூடிக்கிடக்கும் சர்க்கரை ஆலையில் சினிமா ‘ஷூட்டிங்’ நடத்த அனுமதி கொடுத்தது யார்? உடனே அதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்" என்று குறைதீர் கூட்டத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் கொந்தளித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த உரையாடல் விவரம் வருமாறு, "ஆட்சியர் சங்கீதா; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மாவட்டத்தில் கரும்பு குறைந்துள்ளது. குறைவதற்கு என்ன காரணம்?"

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பழனிசாமி: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை ஓடாதது, கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்காது போன்ற காரணங்களால் விவசாயிகள், கரும்பு சாகுபடியை குறைத்துள்ளனர். விவசாயிகள் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டு, மூடிக்கிடக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் சினிமா ‘ஷூட்டிங்’ நடத்துகிறார்கள்.

ஷூட்டிங் நடத்த யார் அனுமதி கொடுத்தார்கள். தொடர்ந்து அனுமதித்தால் ஆலை முன் போராட்டம் நடத்துவோம். ஆலையில் ரூ.500 கோடி மதிப்புள்ள சர்க்கரை ஆலை இயந்திரங்கள் உள்ளன. ஏற்கெனவே ஏராளமான இயந்திரங்கள் திருடு போய் உள்ளது. தற்போது இதுபோல், ஷூட்டிங் நடத்தினால், அவை திருடுப் போக வாய்ப்புள்ளது.

ஆட்சியர் சங்கீதா: மாவட்ட நிர்வாகம், ‘ஷூட்டிங்’ நடத்த அனுமதி கொடுக்கவில்லை. சர்க்கரை ஆலை ஆணையாளர் அனுமதி கொடுத்துள்ளார். அவருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதுகிறேன்.

விவசாயி முருகன்: வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீரில் 50 சதவீதம் குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள தண்ணீரை கொண்டுதான் விவசாயம் செய்ய முடிகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. குடிநீர் ஆதாரத்தை பெருக்க, மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நீர் ஆதாரம் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமலேயே விவசாயிகள் சாகுபடி செய்தவிட்டு தண்ணீர் இல்லாமல் நஷ்டமடைகிறார்கள். அதனால், விவசாயிகளுக்கு தெரியக்கூடிய வகையில் இந்த நீர் ஆதாரம் குறித்த புள்ளி விவரங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆட்சியர் சங்கீதா: வைகை அணையில் போதுமான தண்ணீர் தற்போது இல்லை. நீங்கள் கூறியது போல் பற்றாக்குறையாகத் தான் வைகை அணை தண்ணீர் பானசத்திற்கு பயன்படுத்துகிறோம். தண்ணீரை சேமிப்பது, குடிநீர் ஆதாரத்தை பெருக்குவது, மழைப் பொழிவை அதிகரிக்க வைப்பது இதையெல்லாம் வெறும் அரசின் கடமையாக மட்டுமே கருதி விட வேண்டாம். இந்த எண்ணம், நோக்கம், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மரம் நடுவதில் இருந்து புறப்பட வேண்டும். நமது மதுரை நகரிலே போதுமான மழை பெய்ய வைத்து, குளம், கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.

வைகை - திருமங்கலம் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் ராமன்; உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியம் விக்ரமங்கலம் துணை மின் நிலையத்தில் மும்முனை மின்சாரம் தற்போது அடிக்கடி பழுதடைகிறது. அதனால், மின்மாற்றிகளும் பழுதடைந்து மின்சாரம் விநியோகம் தடைப்பட்டு விசாயிகள் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. விவசாயப் பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய முடியவில்லை. வீட்டு உபயோக மின் சாதனைப் பொருட்கள் புகைந்தும் போய் விடுகிறது.

இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுவதால் பக்கத்தில் செல்கின்ற பெரிய மின் டவரோடு இணைத்து விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தை தரம் உயர்த்தி மின்சாரம் தடைபடாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், விக்ரமங்கலம், முதலைக்குளம், சக்கரப்பநாயக்கனூர், கொடிக்குளம், ரெவார்பட்டி, பானாமூப்பன்பட்டி கிராம ஊராட்சி மக்கள், விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

ஆட்சியர்: குறைதீர் கூட்டம் நடக்கும் புதிய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு மிக சிறியதாகவே உள்ளது. பிரிட்டிஷாரின் பழைய கட்டிடத்திலும் இந்த கூட்டரங்கு சிறியதாகவே இருந்தது. மதுரை போன்ற பெரிய மாவட்டத்திற்கான கூட்டரங்கு, பெரிதாக கட்டியிருக்க வேண்டும். கூட்டரங்கு சிறியதாக இருப்பதால் விவசாயிகளுக்கு போதுமான இருக்கைகள் போட முடியவில்லை. அதனால், 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நின்று கொண்டே குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதைப்பார்த்த ஆட்சியர் சங்கீதா, அலுவலக உதவியாளர்களை அழைத்து, "விவசாயிகளை நிற்க வைக்காதீர்கள், உடனடியாக அவர்களுக்கு இருக்கை போட்டு அமர வையுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு ஊழியர்கள் இருக்கை போட இடம் இல்லாவிட்டாலும், ஆங்காங்கே கிடைக்கிற வழிப்பாதைகளில் இருக்கைகளை போட்டு விவசாயிகளை அமர வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE