கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: பிஎம் கேர்ஸில் அட்மிஷனுக்கு அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

டெல்லி: கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தில் கல்லூரிகள் அட்மிஷன் வழங்க வேண்டுமென என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்று பரவலால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் கல்வி பயில்வதற்காக கல்லூரிகளில் சூப்பர் நியூமரரி இடங்களை ஒதுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, ஒரு கல்லூரியில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்க வேண்டும். அதனுடன், அந்த மாணவர்களுக்கு படிக்கும் காலங்களில் சிறப்பு உதவித்தொகை அளிக்கவும் மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சூப்பர் நியூமரரி அட்மிஷன்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே கரோனா பேரிடர் காலம் முடிந்துவிட்டதால், இத்திட்டம் அமலில் உள்ளதா என்ற சந்தேகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், பிஎம் கேர்ஸ் சூப்பர் நியூமரரி சேர்க்கைத் திட்டம் தொடர்வதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார், அனைத்து மாநிலங்களின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'பிஎம் கேர்ஸ் சூப்பர் நியூமரரி சேர்க்கை திட்டம் அமலில்தான் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து பலன் பெறலாம். இது தவிர, தொழில்நுட்பக் கல்லூரிகளும் சூப்பர் நியூமரரி அட்மிஷன் நடைமுறையை பின்பற்றி விண்ணப்பித்த மாணவர்களுக்கு தாமதமின்றி அட்மிஷன் வழங்க வேண்டும். மேலும், சேர்க்கையின் போது அந்த மாணவர்கள் பிஎம் கேர்ஸ் சான்றிதழ் சமர்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE