சென்னை: மினி பேருந்து வரைவு அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து ஏஐடியுசி சார்பாக அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான வரைவு திட்ட அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ கூடுதலாக மினி பேருந்துகளை இயக்கலாம், சென்னை புறநகர் பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக பரிசீலிக்க அனுமதி என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
புதிய மினி பேருந்து வரைவு திட்டம் குறித்து 30 நாட்களுக்குள் கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனவும், வரைவு அறிக்கை குறித்து வரும் ஜூலை 22-ம் தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, தொடக்கத்திலேயே ஏஐடியுசி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. மேலும், மினி பேருந்துகளையும் அரசு இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஏஐடியுசி சார்பில் அரசுக்கு ஆட்சேபனை கடிதங்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
» கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு 78,000 கன அடியாக அதிகரிப்பு!
» மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவை இன்று தொடக்கம்
இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியதாவது, ‘கடைக்கோடி கிராமத்தினருக்கும் பேருந்து சேவை கிடைக்க வேண்டுமானால் போக்குவரத்து சேவையை அரசே மேற்கொள்ள வேண்டும் என்பது தான் ஏஐடியுசி நிலைப்பாடு. அந்த வகையில் தனியார் மினி பேருந்து வரைவு அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க ஏஐடியுசி மாநில தலைமையிடம் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஏஐடியுசி மற்றும் அதன் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்மேளனம், மாவட்டக் குழுக்கள், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் ஆட்சேபனை தெரிவித்து, மினி பேருந்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அரசின் வசம் இருக்க வேண்டும் என வலியுறுத்துவோம்’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.