ஆளுநர் சனாதனம் பேசினால் இவர்கள் தொழில் கெட்டுவிடும் என நினைக்கிறார்கள்!

By பா.ஜெயவேல்

காயத்ரி ரகுராம் இடை நீக்கம், ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் சூர்யா சிவா பதவி நீக்கம், யூடியூப் சேனல்களின் பேட்டிக்குக் கட்டுப்பாடு என அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகள் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாமலையின் இந்த அதிரடி நடவடிக்கைகள் சரிதானா? பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

பாஜக பிரமுகர்கள் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்க திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதே..?

எல்லாவற்றிலும் ஒழுங்குமுறை கட்டுப்பாடு இருக்க வேண்டும். யாரெல்லாம் மீடியாக்களில் பேசுகிறார்களோ, அவர்களெல்லாம் கட்சியினுடைய நிலைப்பாடு தெரிந்து பேசவேண்டும். பேட்டி கொடுக்க விரும்புகிறவர்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தலைமையின் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. எல்லா கட்சியிலும் உள்ள நிலைப்பாடுதான் இது.

அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பேட்டி, அறிக்கை போன்ற விஷயங்களில் சீனியர்களுக்குக்கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதே..?

இதெல்லாம் மாயை என்றுதான் சொல்ல வேண்டும். எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் தினமும் பேட்டி, அறிக்கை என பொது வெளியில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போன்ற கட்டுப்பாடுகள் மூத்த நிர்வாகிகளுக்குக் கிடையாது.

காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்டுக்கான உண்மையான காரணம் என்ன?

காசி தமிழ்ச் சங்கமத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்றும் தான் ஒதுக்கப்படுவதாகவும் ட்விட்டரில் காயத்ரி ரகுராம் பதிவு செய்திருந்தார். அது தவறானது. அதேசமயத்தில் கட்சியில் இருக்கக்கூடிய சிலரின் ட்விட்டர் பதிவுகளுக்கு மீண்டும் மீண்டும் பொதுவெளியில் கட்சிக்கு எதிரான கருத்துகளையும், தவறான கருத்துகளையும் தெரிவித்து வந்துள்ளார். அதனால் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தன்னைப் பற்றி வரும் அவதூறுகளுக்குக்கூட பதில் அளிக்க அவருக்கு உரிமை இல்லையா?

காசி தமிழ்ச் சங்கமம் என்னும் நிகழ்ச்சிக்கு காயத்ரி ரகுராம் புறக்கணிக்கப்பட்டதாக நினைத்திருந்தால், அவர் மாநிலத் தலைமையிடம் முறையிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, பொதுவெளியில் இதைப் பதிவிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநில நிர்வாகியான அவர், கட்சியினர் யாரேனும் குறித்து புகார் தெரிவிப்பதாக இருந்தாலோ, அவர்கள் தவறாக நடப்பதாகக் கருதினாலோ உடனடியாக கட்சித் தலைமையில் முறையிட்டிருக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்க முடியும். அவரும் மற்றவர்களை போலப் பொதுவெளியில் சண்டையிட்டுக் கொண்டு பொதுவெளியில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போல நடந்துகொண்டிருப்பது தவறுதானே. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அடிமட்ட நிர்வாகிகளிடம் பொதுவெளியில் சண்டையிடுவது ஏற்புடையதல்ல.

பாஜகவில் உள்ள சிலர் ‘வார் ரூம்’ வைத்து தன்னை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்கள் என காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறாரே..?

உண்மைக்குப் புறம்பான தகவல்களை காயத்ரி ரகுராம் தெரிவித்து வருகிறார். இதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து என்னை இடைநீக்கம் செய்தாலும், என்னை நேசிப்பவர்கள் என்னுடன் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது என்கிறாரே காயத்ரி ரகுராம்?

மற்றவர்கள் அவரிடம் பேசுவதை யாரும் தடுக்கவில்லை. 6 மாதத்திற்குக் கட்சிப் பணியை அவர் பார்க்க முடியாது. அவ்வளவுதான்.

டெய்ஸி சரண் - சூர்யா சிவா ஆடியோ வெளியாகிப் பரபரப்பாகி இருக்கிறது. சைதை சாதிக்கின் பேச்சை விட இது வன்மமாக இருக்கிறதே?

சைதை சாதிக் என்பவர் பொதுவெளியில் நடந்த கூட்டத்தில் மிக ஆபாசமாகத் தரக்குறைவாகப் பேசியவர். இதற்காக திமுக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூர்யா சிவா - டெய்ஸி சரண் உரையாடல் என்பது அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற தனிப்பட்ட தொலைபேசி உரையாடல். சூர்யா அப்படிப் பேசியிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய விவகாரம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் உண்மைத் தன்மையை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூர்யா சிவா கட்சிப் பொறுப்பிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

சைதை சாதிக் விவகாரத்தில் குஷ்பு மட்டுமே தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றார். மற்றவர்கள் இதை சீரியஸாக எடுக்காதது ஏன்?

குஷ்புதான் புகார் அளித்திருக்கிறாரே, அதனால் மற்றவர்களும் போக வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக மற்றவர்கள் காயப்படவில்லை என்று சொல்ல முடியாது.

எச்.ராஜாவும் முன்பு குஷ்பு குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசியிருக்கிறாரே?

எச்.ராஜா எப்போது பேசினார், என்ன பேசினார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. திடீரென இப்போது அதைப் பேச வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் குறித்து யார் அவதூறாகப் பேசினாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதில் சந்தேகமே கிடையாது. எச்.ராஜா விவகாரம் எனக்குத் தெரியாததால் என்னால் பதில் சொல்ல முடியாது.

காயத்ரி ரகுராம் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்துப் பேசியதாக பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளாரே?

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதை யாரும் குறைகூற முடியாது. கட்சிக்கு விரோதமாக யாரும் செயல்படக்கூடாது என்பதை மட்டும்தான் நாம் சொல்ல முடியும்.

எங்களின் தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி என அதிமுகவும் பாமகவும் சொல்லி வருகின்றன. அதேசமயம், எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று சொல்லி வந்த பாஜக, தற்போது அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைப்போம் என்கிறதே..?

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பாஜக தலைமையில்தான் எப்போதும் இருக்கும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக பெரிய கட்சி என்பதால் அவர்கள் தலைமையில் கூட்டணி என்று சொல்லி வருகிறோம்.

காசி தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்கிறார்களே?

இங்கிருந்து சென்றவர்கள் அனைவருமே தமிழறிஞர்கள்தான். அங்கு நடத்தப்படும் அத்தனை கலை நிகழ்ச்சிகளையும் தமிழ் கலைஞர்களை வைத்துத்தான் நடத்தி இருக்கிறோம். இது குறித்துத் தெரியாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்வார்கள்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறதே?

முதலில், இது போன்று பேசுபவர்கள் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உயர் சாதியினர் என்று யாரையும் எங்கேயும் குறிப்பிடவில்லை. இந்த இட ஒதுக்கீடு என்பது இப்போது இருக்கக்கூடிய இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத பொதுப்பட்டியலைச் சார்ந்தவர் என்பவர்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்ள முடியுமா? 10 சதவீத இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டும்தான் என்ற ஒரு மாயத் தோற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்த முயல்கிறார்கள். தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட 69 பிரிவுகளும், சாதிகளும் இந்திய அளவில் 150-க்கும் மேற்பட்ட பிரிவுகளும் சாதிகளும் பொதுப்பட்டியலில் இருக்கின்றன.

ஆளுநர் ரவி தமிழக அரசு விவகாரங்களில் குறுக்கீடு செய்வதாகத் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறதே?

ஆளுநர் ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசினால், அவர் அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று சொல்வது மலிவான அரசியல். இவர்களுடைய முழு பிரச்சினையுமே ஆளுநர் சட்ட மசோதாக்களில் கையெழுத்திட மறுக்கிறார் என்பதுதான். அதில் 80 சதவீதம் பல்கலைக்கழகங்கள் குறித்தது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை தங்களால் செய்யமுடியாதது, கல்வியில் கொள்ளையடிக்க முடியாமல் இருப்பது போன்ற காரணங்களுக்காக ஆளுநர் மீது குற்றம்சாட்டுகிறார்கள். சட்டம் - ஒழுங்கு குறித்தும், அனைத்து துறைகளிலும் நடக்கக்கூடிய ஊழல்கள் குறித்தும் பேச ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. இதையெல்லாம் ஆளுநர் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்?

பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் சனாதனம் பற்றி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

ஆளுநர் சனாதனம் பேசக்கூடாதா? அவர் சனாதனம் பேசினால் என்ன தவறு. சனாதன தர்மம் என்பது நம்முடைய கலாச்சாரம், நமது பண்பாடு. இது பாரத மண்ணின் தன்மை. சனாதனம் குறித்துப் பேசினால், இவர்களுக்கு ஏன் வயிற்றில் அடித்தது போலத் தெரிகிறது. இவர்களின் தொழில் கெட்டுவிடும் என நினைக்கிறார்கள். சனாதனம் குறித்து தவறாகத்தான் பேசக் கூடாதே தவிர, சனாதனம் பேசக்கூடாது என இவர்கள் சொல்வது தவறு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE