கரூரில் இன்று சாதா புறா போட்டி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: சாதா புறா போட்டி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில் 16 சாதா புறாக்கள் பறக்க விடப்பட்டன.

முன்னாள் கரூர் நகர்மன்ற உறுப்பினர் ரா.வைரப்பெருமாள் 53ம் ஆண்டு நினைவு சாதா புறா போட்டி இன்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. ஈரோடு பி.கந்தசாமி, திருச்சி ஜி.ஷேக் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் 16 சாதா புறாக்கள் பறக்க விடப்பட்டன.

போட்டிகள் இன்று தொடங்கி நாளை மறுநாள் (ஜூலை 21ம் தேதி) வரை 3 நாட்கள் நடைபெறும். சாதா புறா நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 6 மணி நேரம் பறக்கவேண்டும். விதிகளுக்கு உட்பட்டு தேர்வாகும் புறாக்கள் 2ம் நாள் போட்டியிலும், 2 நாளில் தேர்வாகும் புறாக்கள் 3ம் நாள் போட்டியிலும் பறக்கவிடப்படும். 3ம் நாள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் புறாக்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்படும்.

சாதா புறா போட்டியில் வெற்றிப் பெறும் புறாக்களுக்கு முதல் பரிசு ரூ.9,001, 2ம் பரிசு ரூ.6,001, 3ம் பரிசு ரூ.3,001 வழங்கப்படும். போட்டி நடுவர்களாக எஸ்.அரங்கராஜ், எம்.குணா, ஏ.ராமன், ஏ.காஜா, கோபு, எம்.மோகன், ரா.சங்கர், கே.ஜெ.விக்னேஷ்வரன், எம்.ஜெகநாதன், ஏ.ராமு ஆகியோர் செயல்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து கர்ணப் புறா போட்டிகள் ஆகஸ்டு 16ம் தேதி தொடங்கி 17, 18 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இரு போட்டிகளும் முடிவடைந்த பிறகு பரிசுகள் வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE